| ADDED : ஜூலை 08, 2024 11:01 PM
முனிக்: யூரோ கோப்பை கால்பந்து அரையிறுதியில் இன்று பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜெர்மனியில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இத்தாலி, தொடரை நடத்தும் ஜெர்மனி, ரொனால்டோவின் போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் வெளியேறின. இன்று முனிக்கில் நடக்கும் முதல் அரையிறுதியில் உலகின் 'நம்பர்-2' பிரான்ஸ் அணி, 8வது இடத்திலுள்ள ஸ்பெயினை சந்திக்கிறது. பிரான்ஸ் அணியை பொறுத்தவரை 2016ல் யூரோ, 2018, 2022 உலக கோப்பை தொடர் என கடைசி 4 முக்கிய தொடரில், 3 முறை பைனலுக்கு முன்னேறியது. இம்முறை லீக் சுற்று (1 வெற்றி, 2 'டிரா') உட்பட இதுவரை பங்கேற்ற 5 போட்டியில், 1 கோல் (2 'சேம்சைடு கோல்) மட்டும் தான் அடித்தது. இதை கேப்டன் எம்பாப்வே 'பெனால்டியில்' அடித்தார். காலிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' வென்றது. இன்று கிரீஸ்மான், ஹெர்னாண்டஸ், ராபியட் கோல் அடித்தால் வெற்றி எளிதாகும். ஸ்பெயின் அணி இதுவரை பங்கேற்ற 5 போட்டியிலும் சாதித்து, 100 சதவீத வெற்றியுடன் வந்துள்ளது. இதுவரை பேபியன் (2), டேனி ஆல்மோ (1), ராட்ரி (1) உள்ளிட்டோர், 11 கோல் அடித்துள்ளனர். எனினும் முக்கிய வீரர்கள் பெத்ரி (காயம்), டேனி கார்வாஜல், ராபின் லீ நார்மண்ட் (தடை) இன்று பங்கேற்க முடியாதது சிக்கல் தரலாம். இருப்பினும் இரு அணிகளும் இதுவரை 5 போட்டியில் எதிரணிக்கு 3 கோல் தான் விட்டுத்தந்தன. இதனால் இன்று விறுவிறு மோதலை எதிர்பார்க்கலாம். 6யூரோ கால்பந்தில் ஆறாவது முறையாக அரையிறுதியில் பங்கேற்கிறது ஸ்பெயின். இதில் 2020 (இத்தாலியிடம் தோல்வி) தவிர, மற்ற 5 முறை பைனலுக்கு முன்னேறியது. * பிரான்ஸ் 5 முறை அரையிறுதியில் பங்கேற்று, 3 முறை பைனலுக்குள் நுழைந்தது.16ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் 36 போட்டியில் மோதின. ஸ்பெயின் 16, பிரான்ஸ் 13ல் வென்றன. 7 போட்டி 'டிரா' ஆனது.