கால்பந்து: இந்தியா டிரா
கச்சிபவுலி: 'இன்டர்கான்டினென்டல்' கால்பந்து தொடரில் இந்தியா, மொரீசியஸ் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்கான்டினென்டல்' கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. இந்தியா, சிரியா, மொரீசியஸ் என மூன்று அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா, மொரீசியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.போட்டியின் 6வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் அனிருத் தபா அடிக்க, பந்தை தலையால் முட்டி கோலாக மாற்ற முயன்றார் சிங்கிளன்செனா. 26வது நிமிடம் கிடைத்த கார்னர் வாய்ப்பில் எடுத்த இந்திய வீரர்களின் கோல் முயற்சி வீணானது.போட்டியின் 36 வது நிமிடத்தில் மொரீசியஸ் வீரர் இம்மானுவேல் ருடி வின்சென்ட் அடித்த பந்து, இந்திய அணி கோல் போஸ்ட் 'பார்' மீது பட்டுத் திரும்ப, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.43 வது நிமிடம் இந்திய வீரர் அனிருத் தபா, எடுத்த கோல் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் கோல் அடிக்க போராடினர். போட்டியில் 69 சதவீத நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், சரியான 'பினிஷிங்' இல்லாமல் இந்திய வீரர்கள் திணறினர். முடிவில் கோல் எதுவுமின்றி போட்டி 'டிரா' ஆனது.புதிய கேப்டன்சுனில் செத்ரி ஓய்வு, பயிற்சியாளர் ஸ்டிமாக் நீக்கத்துக்குப் பின் இந்திய அணி, முதன் முறையாக புதிய தொடரில் பங்கேற்றது. இதில், புதிய பயிற்சியாளராக மனோலா மார்கஸ் களமிறங்க, புதிய கேப்டனாக மும்பையை சேர்ந்த ராகுல் பெகே 33, செயல்பட்டார்.