உலக கோப்பை கால்பந்து: குராசோ தகுதி * சிறிய நாடாக சாதனை
கிங்ஸ்டன்: உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற சிறிய நாடு என சாதனை படைத்தது குராசோ.'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபிய நாடுகளுக்கான ('கன்காகப்'), 3வது கட்ட தகுதிச்சுற்றில் 12 அணிகள் பங்கேற்றன. இவை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடந்தன. 'பி' பிரிவில் நடந்த கடைசி போட்டியில் குராசோ (11), ஜமைக்கா (10) அணிகள் மோதின. 78 வயது பயிற்சியாளர் டிக் அட்வோகாட் குடும்ப காரணங்களுக்கான நாடு (நெதர்லாந்து) திரும்பிய நிலையில், குராசோ அணியினர் போராடினர். முடிவில், இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குராசோ (12), முதன் முறையாக உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இதையடுத்து உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும், உலகின் மிகச்சிறிய நாடு என குராசோ, சாதனை படைத்தது. ஹைதி தகுதி'ஏ' பிரிவில் பனாமா அணி தகுதி பெற்றது. 'சி' பிரிவில் நடந்த போட்டியில் ஹைதி அணி 2-0 என நிகரகுவா அணியை வென்றது. 11 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. 51 ஆண்டுக்குப் பின் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 1,56,115 பேர்கரீபிய பகுதியில் 444 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ள சிறிய தீவு குராசோ. நெதர்லாந்தின் ஆளுமைக்கு உட்பட்டது. இதன் மொத்த மக்கள் தொகை 1,56,115 பேர். தற்போது உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற குறைந்த மக்கள் தொகை கொண்ட, மிகச்சிறிய நாடு என பெருமை பெற்றது. இதற்கு முன் 2018ல் (ரஷ்யா) பங்கேற்ற ஐஸ்லாந்து அணி (3,50,000 பேர்) முதலிடத்தில் இருந்தது.