செல்சி அணி வெற்றி * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
அட்லாண்டா: கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் செல்சி அணி வெற்றி பெற்றது. அமெரிக்காவில் உலகின் முன்னணி கிளப் அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. அட்லாண்டாவில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் செல்சி (பிரிட்டன்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) அணிகள் மோதின. செல்சி அணிக்கு பெட்ரோ நேடோ (34வது நிமிடம்), பெர்னாண்டஸ் (79) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பிரேசிலின் பிளமெங்கோ அணி, 2-0 என்ற கோல் கணக்கில் துனிஷியாவின் எஸ்பரன்ஸ் டி துனிசை வீழ்த்தியது. பிளமெங்கோ அணிக்கு அராஸ்கெயட்டா (17), லுாயிஸ் அராஜுவோ (70) தலா ஒரு கோல் அடித்தனர். 'சி' பிரிவில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவின் போகா ஜூனியர்ஸ், போர்ச்சுகலின் பெனிபிகா அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. போகா அணிக்கு மெரன்டியல் (21), பட்டாக்லியா (27) கோல் அடிக்க, பெனிபிகா சார்பில் ஏஞ்சல் டி மரியா, நிகோலஸ் ஓடமண்டி தலா ஒரு கோல் அடித்தனர்.