இந்தியாவிடம் வீழ்ந்தது மாலத்தீவு * நட்பு கால்பந்து போட்டியில்...
ஷில்லாங்: நட்பு கால்பந்தில் இந்திய அணி, 3-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவு அணியை வீழ்த்தியது. ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று மார்ச் 25ல் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி, 162வது இடத்திலுள்ள மாலத்தீவுக்கு எதிராக நட்பு போட்டியில் மோதியது. இப்போட்டி, மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத்தில், முதன் முறையாக நடந்தது. ஓய்வுக்குப் பின் நேற்று மீண்டும் வந்த சுனில் செத்ரி, கேப்டனாக களமிறங்கினார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தவிர 2021க்குப் பின் மாலத்தீவு அணிக்கு எதிராக களமிறங்கினார். போட்டியின் 15வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில், சுனில் செத்ரி தலையால் முட்டி கோலாக மாற்ற முயற்சித்தார். போட்டியின் 18 வது நிமிடத்தில் இந்தியாவின் சுரேஷ் பந்தை, பிரண்டனுக்கு 'பாஸ்' செய்தார். இதை கோல் போஸ்டுக்கு வலது புறமாக அடிக்க, வாய்ப்பு நழுவியது.முதல் கோல்போட்டியின் 35வது நிமிடத்தில் இந்திய அணிக்கு மீண்டும் கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பிரண்டன் மாலத்தீவு கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார். அங்கிருந்த ராகுல் பெக்கே, அப்படியே அந்தரத்தில் உயர்ந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 46 வது நிமிடம் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் மகேஷ் பந்தை அடித்தார். இதை அங்கிருந்த கேப்டன் சுனில் செத்ரி, தலையால் முட்டி தள்ளினார். துரதிருஷ்வசமாக பந்து கோல் போஸ்ட் அருகில் மாலத்தீவு வீரர் காலில் பட்டு திரும்பியது. மீண்டும் அபாரம்64 வது நிமிடத்தில் லிஸ்டன் கோலாக்கோ அடித்த பந்தை, மாலத்தீவு கோல் கீப்பர் உசைன் ஷெரீப் காலால் தடுத்து வெளியே தள்ளினார். அப்போது கிடைத்த கார்னர் கிக்கில் பந்தை அடித்தார் மகேஷ். இம்முறை லிஸ்டன் (66) அப்படியே முன்பக்க தலையால் முட்டி கோல் அடித்து மிரட்டினார். 76 வது நிமிடம் மகேஷ் அடித்த பந்தை, தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார் சுனில் செத்ரி. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.16 வெற்றிகால்பந்து அரங்கில் இந்தியா, மாலத்தீவு அணிகள் நேற்று 22வது முறையாக மோதின. இதில் தனது 16 வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா. 2 போட்டி 'டிரா' ஆனது. 4ல் மாலத்தீவு வென்றது.286 நாளுக்குப் பின்...இந்திய அணியில் இருந்து கடந்த 2024 ஜூன் மாதம் ஓய்வு பெற்றார் சுனில் செத்ரி. 286 நாளுக்குப் பின் நேற்று மீண்டும் களமிறங்கிய இவர், ஒரு கோல் அடித்தார். சர்வதேச அரங்கில், இவரது 95வது கோல் (152 போட்டி) ஆனது. * மாலத்தீவு அணிக்கு எதிராக 2011 முதல் விளையாடி வரும் சுனில் செத்ரி, நேற்று 9வது கோல் அடித்தார்.