மோகன் பகான்-பெங்களூரு மோதல்: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில்
கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில் இன்று மோகன் பகான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. இன்று கோல்கட்டாவில் நடக்கும் பைனலில் மோகன் பகான் அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது.லீக் சுற்றில் விளையாடிய 24 போட்டியில், 17 வெற்றி, 5 'டிரா', 2 தோல்வி என, 56 புள்ளிகளுடன் மோகன் பகான் அணி முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த அரையிறுதியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்திய மோகன் பகான் அணி, 4வது முறையாக (2020-21, 2022-23, 2023-24, 2024-25) பைனலுக்குள் நுழைந்தது.லீக் சுற்றில் கோல் அடித்த ஜேமி மெக்லாரன் (11 கோல்), ஜேசன் ஸ்டீவன் கம்மிங்ஸ் (6), சுபாசிஷ் போஸ் (6), மன்விர் சிங் (5) மீண்டும் கைகொடுத்தால் மோகன் பகான் அணி 2வது முறையாக கோப்பை வெல்லலாம்.லீக் சுற்றின் முடிவில் 3வது இடம் பிடித்த பெங்களூரு அணி (38 புள்ளி, 11 வெற்றி, 5 'டிரா', 8 தோல்வி), 'பிளே-ஆப்' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணியை தோற்கடித்தது. அடுத்து நடந்த அரையிறுதியில் கோவா அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, 4வது முறையாக (2017-18, 2018-19, 2022-23, 2024-25) பைனலுக்கு முன்னேறியது.லீக் சுற்றில் கைகொடுத்த சுனில் செத்ரி (14 கோல்), எட்கர் (9), ரியான் வில்லியம்ஸ் (7) உள்ளிட்டோர் மீண்டும் அசத்தினால் பெங்களூரு அணி 2வது முறையாக சாம்பியன் ஆகலாம்.
இரண்டாவது முறை
ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில் மோகன் பகான், பெங்களூரு அணிகள் 2வது முறையாக மோதுகின்றன. இதற்கு முன் 2022-23 சீசனில் நடந்த பைனலில் மோகன் பகான் அணி 4-3 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் பெங்களூருவை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றது. இத்தோல்விக்கு இன்று பெங்களூரு அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கலாம்.