அனந்த் ஜீத் சிங் தங்கம்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் ('ஸ்கீட்') தங்கம் வென்றார்.கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் நருகா, 119.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய அனந்த் ஜீத் சிங், 57 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.இந்தியா வெண்கலம்: கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி (286.10 புள்ளி), சுருச்சி இந்தர் சிங் (292.10) ஜோடி 578.20 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இந்திய ஜோடி, சீனதைபேயின் ஹெங்-யு லியு, ஹசியாங்-சென் ஹசீ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய சவுரப், சுருச்சி ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை கைப்பற்றியது.ஜூனியர் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி, கவின் அந்தோணி ஜோடி 16-14 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் யெஜின், கிம் டூயோன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.