இந்தியாவிடம் வீழ்ந்தது அர்ஜென்டினா: ஜூனியர் ஹாக்கியில் அபாரம்
ரோசாரியோ: ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-0 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அர்ஜென்டினாவை வென்றது.அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதலிரண்டு போட்டியில் சிலி, உருகுவேயை வீழ்த்திய இந்தியா, 3வது லீக் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு கனிகா (44வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். அர்ஜென்டினா சார்பில் மிலாக்ரோஸ் டெல் வாலே (10வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் இந்தியா சார்பில் 2 கோல் அடிக்கப்பட்டது. இந்திய கேப்டன், கோல்கீப்பர் நிதி, அர்ஜென்டினாவின் கோலடிக்கும் முயற்சியை தொடர்ச்சியாக 4 முறை தடுத்தார். முடிவில் இந்திய அணி 2-0 என 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.இந்திய அணி, தனது 4வது லீக் போட்டியில் (மே 30) சிலியை மீண்டும் சந்திக்கிறது.