ஆசிய அலைச்சறுக்கு: ரமேஷ் வெண்கலம்
சென்னை: ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் இந்தியாவின் ரமேஷ் புதிஹல் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்.சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் கடற்கரையில், ஆசிய 'சர்பிங்' (அலைச்சறுக்கு) சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் ரமேஷ் புதிஹல் பங்கேற்றார். இதில் 12.60 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த ரமேஷ், வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.தென் கொரியாவின் கனோவா ஹீஜே (15.17 புள்ளி), இந்தோனேஷியாவின் பஜர் அரியானா (14.57) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர்.பெண்களுக்கான ஓபன் பிரிவு பைனலில் ஜப்பானின் அன்ரி மட்சுனோ (14.90 புள்ளி), சுமோமோ சடோ (13.70), தாய்லாந்தின் இசபெல் ஹிக்ஸ் (11.76) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஆண்களுக்கான 18 வயதுகுட்பட்டோர் பிரிவில் தென் கொரிய வீரர் ஹீஜே (14.33 புள்ளி) தங்கத்தை தட்டிச் சென்றார். பெண்கள் பிரிவில் சீனாவின் சிகி யாங் (14.50 புள்ளி) தங்கம் வென்றார்.