பெங்களூரு அணி 4வது வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் பெங்களூரு அணி வரிசையாக 4வது வெற்றி பெற்றது.சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பெங்களூரு, ஆமதாபாத் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெங்களூருவின் அந்தோணி அமல்ராஜ் 1-2 (9-11, 10-11, 11-10) என ஆமதாபாத்தின் லிலியன் பார்டெட்டிடம் வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெங்களூருவின் மணிகா பத்ரா 1-2 (11-7, 9-11, 7-11) என ஆமதாபாத்தின் பெர்னாடெட் சோக்சிடம் தோல்வியடைந்தார்.கலப்பு இரட்டையர் போட்டியில் மணிகா பத்ரா, அல்வாரோ ரோபிள்ஸ் ஜோடி 1-2 என ஆமதாப்த்தின் மானுஷ் ஷா, பெர்னாடெட் ஜோடியிடம் வீழ்ந்தது. பின் எழுச்சி கண்ட பெங்களூரு அணிக்கு ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் அல்வாரோ ரோபிள்ஸ் 3-0 (11-8, 11-7, 11-6) என மானுஷ் ஷாவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் பெங்களூருவின் லில்லி ஜாங் 3-0 (11-5, 11-8, 11-10) என ஆமதாபாத்தின் கிருத்விகா சின்ஹா ராயை தோற்கடித்தார்.முடிவில் பெங்களூரு அணி 9-6 என்ற கணக்கில் 4வது வெற்றி பெற்றது. முதல் மூன்று போட்டியில் சென்னை, புனே, ஜெய்ப்பூர் அணிகளை வென்றது. மற்றொரு லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய அஜந்தா சரத் கமல் தலைமையிலான சென்னை அணி 6-9 என தோல்வியடைந்தது.