அரையிறுதியில் பூஜா, ஜாஸ்மின் * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்...
லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்தியாவின் பூஜா, ஜாஸ்மின் முன்னேறினர். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 80 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி, போலந்தின் எமிலியா கோடர்ஸ்காவை சந்தித்தார்.இருவரும் சமபலத்தில் மோதினர். இருப்பினும் பூஜா 3-2 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் (57 கிலோ), உஸ்பெகிஸ்தானின் மமஜொனோவாவை எதிர்கொண்டார். இதில் ஆதிக்கம் செலுத்திய ஜாஸ்மின், 5-0 என ஒரு மனதாக வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஏற்கனவே நுபுர் ஷியோரன், தற்போது பூஜா, ஜாஸ்மின் என மூன்று வீராங்கனைகள் குறைந்தபட்ச பதக்கத்தை உறுதி செய்தனர். நிஹாத் தோல்விகடந்த 2022, 2023 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியாவின் நிஹாத் ஜரீன், 51 கிலோ பிரிவு காலிறுதியில் ஒலிம்பிக்கில் இரு முறை வெள்ளி (2021, 2024) வென்ற துருக்கியின் புசே நாசை சந்தித்தார். கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய போதும், நிஹாத் 0-5 என தோல்வியடைந்தார். ஆண்கள் 65 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபினாஷ், 1-4 என ஜார்ஜியாவின் லாஷா குருலியிடம் வீழ்ந்தார்.