தங்கம் வெல்வாரா நீரஜ் * இன்று டைமண்ட் லீக் பைனல் துவக்கம்
பிரசல்ஸ்: டைமண்ட் லீக் பைனல் இன்று பெல்ஜியத்தில் துவங்குகிறது. இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்லலாம்.டைமண்ட் லீக் தடகளத்தின் 15வது சீசன் தற்போது நடக்கிறது. 2024ல் உலகின் 14 இடங்களில் போட்டி நடந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-6' நட்சத்திரங்கள், இன்று பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் துவங்கவுள்ள டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க உள்ளனர்.ஈட்டி எறிதல் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்குகிறார். 2023 பைனலில் நீரஜ் சோப்ரா, 83.80 மீ., துாரம் எறிந்து வெள்ளி வென்றிருந்தார்.தற்போது 2024 சீசனில் 14 புள்ளி பெற்று, நான்காவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியுள்ளார். தவிர, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்று தந்த இவர், மீண்டும் அசத்தினால், முதன் முறையாக தங்கம் கைப்பற்றலாம்.கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (29 புள்ளி), ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (21), செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் (16) சவால் தர உள்ளனர். இந்தியாவின் அவினாஷ் சபிள் (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்) முதன் முறையாக டைமண்ட் லீக் பைனலில் பங்கேற்க உள்ளார்.