மொகி: ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு இந்திய ஜூனியர் அணி முன்னேறியது. சீனாவின் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (21 வயது) 10வது சீசன் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. முதல் 3 போட்டியில் 2 வெற்றி, 1 'டிரா' செய்தது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 15-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அன்மோல் எக்கா, 6 கோல் அடித்து (25, 29, 32, 33, 45, 51 வது நிமிடம்) மிரட்டினார். ஆர்யன் (17, 52, 53) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். ஹர்பல் (48, 53) இரண்டு கோல் அடித்து உதவினார். தவிர, பிரப்தீப் (18), குர்சேவக் (22), ஹர்குடே (28), அஜீத் (35) தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடித்தனர். பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 'டிரா' செய்த இந்திய அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது. இரண்டாவது இடம் பெற்ற தென் கொரியாவும் (9 புள்ளி) அரையிறுதிக்குள் நுழைந்தது.பெண்கள் 'டிரா'பெண்கள் பிரிவில் மொத்தம் 10 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்தியா, சீனா உட்பட 5 அணிகள், 'எலைட்' பிரிவில் இடம் பெற்றன. தனது முதல் 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று தனது கடைசி லீக் போட்டியில் சீனாவை சந்தித்தது. இப்போட்டி கோல் எதுவும் இன்றி 'டிரா' (0-0) ஆனது. லீக் சுற்று முடிவில் இந்தியா (10 புள்ளி), சீனா (10), ஜப்பான் (6), தென் கொரியா (3), மலேசிய (0) அணிகள் 'டாப்-5' இடம் பெற்றன. இந்தியா-பாக்., மோதல்பெண்களுக்கான ஆசிய கோப்பையில் இன்று காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. இதன் முதல் காலிறுதியில் 'எலைட்' பிரிவில் முதலிடம் பெற்ற இந்திய அணி, சாலஞ்சர் பிரிவில் 3வது இடம் பெற்ற பாகிஸ்தானை இன்று சந்திக்கிறது.