மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
17-Dec-2025
புதுடில்லி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக 5 ஆண்டுக்குப் பின், மீண்டும் மரிஜ்னே நியமிக்கப்பட்டார். இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு, கடந்த 2017-2021ல் நெதர்லாந்தின் சிஜோர்டு மரிஜ்னே 51, பயிற்சியாளராக இருந்தார். அப்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021), இந்திய பெண்கள் அணி 4வது இடம் பிடித்தது. உலகத் தரவரிசையில் 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்றது. இதன் பின், முன்னணி வீராங்கனைகள் ராணி ராம்பால், வந்தனா, தீப் கிரேஸ் ஓய்வு பெற்றனர். இருப்பினும் 2022 காமன்வெல்த், 2023 ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றது. கடந்த 2024 முதல் ஹரேந்திரா சிங் 56, பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இந்தியா பங்கேற்ற 16 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. புரோ ஹாக்கி தொடரில், மோசமான செயல்பாடு காரணமாக, அடுத்த சீசனுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து ஹரேந்திரா சிங் பதவி விலகினார். தற்போது, புதிய பயிற்சியாளராக மரிஜ்னே 51, மீண்டும் நியமிக்கப்பட்டார். வரும் 14ல் இந்தியா வரவுள்ள இவர், 19 முதல் பெங்களூருவில் துவங்கும் பயிற்சி முகாமில், இந்திய அணியுடன் இணைய உள்ளார். அறிவியல் ஆலோசகராக தென் ஆப்ரிக்காவின் லம்பார்டு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் மார்ச் 8-14ல் நடக்க உள்ள உலக கோப்பை தகுதிச்சுற்றில் இருந்து, மரிஜ்னே பணி துவங்க உள்ளது.புத்துணர்ச்சியுடன்...மரிஜ்னே கூறுகையில்,'' சுமார் 5 ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி. சர்வதேச அரங்கில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட உதவ காத்திருக்கிறேன். இதற்காக புத்துணர்ச்சியுடன், தெளிவான திட்டத்துடன் வந்துள்ளேன்,'' என்றார்.
17-Dec-2025