காலிறுதியில் இந்தியா-பெல்ஜியம் மோதல்: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில்
சென்னை: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதியில் நாளை இந்தியா,பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றது. சிலி (7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்தை (5-0) வீழ்த்திய இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. தவிர, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, நியூசிலாந்து, பெல்ஜியம் என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.இதற்கான அட்டவணை வெளியானது. நாளை சென்னையில் நடக்கும் நான்காவது காலிறுதி போட்டியில் இந்திய அணி, 'டி' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. தரவரிசையில் 2வது இடத்திலுள்ள இந்திய அணி, சொந்தமண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சாதிக்க காத்திருக்கிறது.மற்ற காலிறுதி போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி-பிரான்ஸ், ஸ்பெயின்-நியூசிலாந்து, நெதர்லாந்து-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.