குகேஷ்-லிரென் மீண்டும் டிரா: உலக செஸ் போட்டியில் விறுவிறு
சிங்கப்பூர்: குகேஷ், டிங் லிரென் மோதிய உலக செஸ் சாம்பியன்ஷிப் 6வது சுற்று 'டிரா' ஆனது.சிங்கப்பூரில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த உலகின் 'நம்பர்---5' இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்---15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர். மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி. முதல் ஐந்து சுற்றின் முடிவில், போட்டி தலா 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தது.ஆறாவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி, 46வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இது, இத்தொடரில் தொடர்ச்சியாக பதிவான 3வது 'டிரா'. ஆறு சுற்றுகளின் முடிவில், ஒரு வெற்றி, 4 'டிரா', ஒரு தோல்வி என, இருவரும் தலா 3.0 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
அர்ஜுன் 'நம்பர்-4'
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில், சர்வதேச தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, 2801 'எலோ' புள்ளிகளுடன் 4வது இடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், தரவரிசையில் 2800 'எலோ' புள்ளி பெற்ற 2வது இந்திய வீரரானார் அர்ஜுன். சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டிய 16வது வீரரானார். சமீபத்தில் முடிந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் அசத்திய அர்ஜுன் 21, தனிநபர், அணிகள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இப்பட்டியலில் 5வது இடத்தில் இந்தியாவின் குகேஷ் (2783 'எலோ' புள்ளி) உள்ளார். முதல் மூன்று இடங்களில் நார்வேயின் மக்னஸ் கார்ல்சன் (2831), அமெரிக்காவின் பேபியானோ காருணா (2805), ஹிகாரு நகமுரா (2802) உள்ளனர்.