தேசிய விளையாட்டு துவக்கம் * பிரதமர் மோடி உற்சாகம்
டேராடூன்: உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது,'' 2036ல் ஒலிம்பிக் நடத்துவது, இந்திய விளையாட்டினை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்,'' என்றார். இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நேற்று துவங்கியது. டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்டுவானி, ருத்ரபூர், ஷிவ்பூரி, நியூ டெஹ்ரி உள்ளிட்ட 11 இடங்களில், 18 நாள் நடக்கும். 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நீச்சல், துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதுாக்குதல் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உட்பட 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று இதற்கான துவக்கவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி மைதானத்தை வலம் வந்தார். மேடையில் இவருக்கு பாரம்பரிய தொப்பி, சால்வை உள்ளிட்ட நினைவு பொருள் வழங்கப்பட்டன. கடவுள் சிவனின் 'தாண்டவ' நடனத்துடன் விழா துவங்கியது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா வரவேற்றார். பின் வீரர்கள் அணிவகுப்பு துவங்கியது.முதல் அணியாக சத்தீஸ்கர் வந்தது. அடுத்து தாத்ரா நாகர் ஹவேலி, டில்லி, கோவா, குஜராத், அடுத்து ராஜஸ்தான், சிக்கிம், தமிழக வீரர், வீராங்கனைகள் அணிவகுத்தனர். இந்திய பாட்மின்டனின் இளம் வீரர், உத்தரகாண்ட்டின் லக்சயா சென், தேசிய விளையாட்டு ஜோதியை ஏந்தி வந்து, பிரதமர் மோடியிடம் வழங்கினார். பின் 2022 (குஜராத்), 2023 (கோவா) வரிசையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக, பிரதமர் மோடி, தேசிய விளையாட்டினை துவக்கி வைத்தார். லக்சயா சென் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். கடைசியாக லேசர் ஷோ, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது மோடி கூறியது:ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டு போட்டி மட்டுமல்ல. ஒவ்வொரு முறை ஒலிம்பிக் நடக்கும் போதும், அனைத்து பிரிவினருக்கும் லாபம் கிடைக்கிறது. விளையாட்டு நட்சத்திரங்களுக்கு சிறப்பான வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. பல்வேறு புதிய கட்டுமானம், தொடர்புகள், போக்குவரத்து வசதிகள் பெருகும். முத்தாய்ப்பாக, சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். உலகின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் இந்தியா வருவர். உலகின் பெரிய பொருளாதார நாடாக மாறி வருகிறது. இதில் விளையாட்டு பொருளாதாரமும் பங்கெடுக்க வேண்டும். பயிற்சியாளர், பயிற்றுனர், பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர், டாக்டர் என அனைவருக்கும் இதில் பங்குண்டு. இதனால், வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முயற்சிகள் எடுத்து வருகிறோம். இது இந்திய விளையாட்டினை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் கூறினார். இளைஞர்களுக்கு 'அட்வைஸ்'பிரதமர் மோடி பேசுகையில்,'' விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஆதரவு தந்து, உங்களை திறமையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஏனெனில், எங்களைப் பொறுத்தவரையில் தேசத்தின் வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என நினைக்கிறோம். இளைஞர்கள் உணவில் எண்ணெய் பயன்பாட்டினை குறைக்க வேண்டும். அதிக நடைப் பயிற்சி, உடற்பயிற்சியில் ஈடுபட்டு, அதிகரித்து வரும் உடல் எடை அதிகரிப்பு அபாயத்தை எதிர்த்து போராட வேண்டும்,'' என்றார்.450 தங்கம்உத்தரகாண்ட் தேசிய விளையாட்டில் மொத்தம் 450 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளன. இதேபோல தலா 450 வெள்ளி, வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும்.ரூ. 1000 கோடிதேசிய விளையாட்டினை ரூ. 350 கோடி செலவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு புதிய கட்டுமான பணிகள் செய்யப்பட்டதால், ரூ. 1000 கோடி வரை செலவாகியுள்ளது.25,000டேராடூனில் உள்ள ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தேசிய விளையாட்டு துவக்கவிழா நடந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல், மொத்தம் 25,000 பேர் திரண்டு கண்டுகளித்தனர்.