உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பரிசு மழையில் பாராலிம்பிக் சாம்பியன்கள்... * டில்லியில் உற்சாக வரவேற்பு

பரிசு மழையில் பாராலிம்பிக் சாம்பியன்கள்... * டில்லியில் உற்சாக வரவேற்பு

புதுடில்லி: பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள் நேற்று தாயகம் திரும்பினர். இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றனர். தமிழகத்தின் மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) உள்ளிட்டோர் பதக்கம் வென்று அசத்தினர். 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன், இந்தியா 18வது இடம் பிடித்தது. இது, பாராலிம்பிக் வரலாற்றில் சிறந்த செயல்பாடாக அமைந்தது. பாராலிம்பிக் முடிந்த நிலையில், பாரிசில் இருந்து கிளம்பிய நமது நட்சத்திரங்கள் நேற்று டில்லி விமான நிலையம் வந்திறங்கினர். இவர்களுக்கு பாரம்பரிய மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரா வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலம் வென்ற ஷீத்தல் தேவி கூறுகையில்,''வில்வித்தையில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சி. அரசிடம் இருந்து ஆதரவு கிடைத்ததால் தான் இவ்வளது பதக்கம் வெல்ல முடிந்தது. பாரிஸ் பாராலிம்பிக் சிறந்த அனுபவமாக அமைந்தது,''என்றார்.ஈட்டி டூ டீ ஈட்டி எறிதலில் (எப் 64 பிரிவு, பைக் விபத்தில் சிக்கி இடது முழங்காலுக்கு கீழ் அகற்றம்) தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற சுமித் அன்டில் கூறுகையில்,''பிரமாண்ட வரவேற்பு அளித்ததற்கு நன்றி. போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி இருந்ததால், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, தங்கம் வென்றேன். ஈட்டி எறிதலில் எனது கனவு இலக்கான 75 மீ., துாரத்தை விரைவில் எட்டுவேன். கடந்த சில நாளாக டீ கூட குடிக்கவில்லை. குடும்பத்தினருடன் சேர்ந்து டீ குடிக்க ஆவலாக உள்ளேன்,''என்றார்.மனஉறுதிக்கு உதாரணம்பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்த ஹர்விந்தர் சிங், பஞ்சாப் பல்கலையில் பிஎச்.டி., முடிக்க காத்திருக்கிறார். இவர் கூறுகையில்,''படிப்பு, விளையாட்டு என எப்போதும் 'பிசி'யாக இருப்பேன். மனதளவில் உடைந்து போனவர்கள் அல்லது தோல்வியால் துவண்டு போனவர்கள் பாரா தடகள நட்சத்திரங்களின் மனஉறுதியை பார்த்து உத்வேகம் பெறலாம்,''என்றார்.ரூ. 75 லட்சம் பாராலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கான பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார். தங்கம் வென்றவருக்கு ரூ. 75 லட்சம், வெள்ளி, வெண்கலம் வென்றவருக்கு முறையே ரூ. 50 லட்சம், ரூ. 30 லட்சம் வழங்கப்படும். கலப்பு பிரிவில் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி உட்பட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 22.5 லட்சம் தரப்படும். மன்சுக் மாண்டவியா கூறுகையில்,''பாராலிம்பிக் விளையாட்டில் இந்தியா அசுர வளர்ச்சி கண்டுள்ளது. 2016ல் 4, 2021ல் 19 பதக்கம் வென்றோம். இம்முறை பாரிசில் 29 பதக்கம் வென்று சாதித்துள்ளோம். நமது பாரா விளையாட்டு நட்சத்திரங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள பாராலிம்பிக்கில் இன்னும் அதிகமான பதக்கங்களை வெல்வர்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை