ஆளப்போறார் அவனி... * பாரிஸ் பாராலிம்பிக்கில்
புதுடில்லி: ''பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வெல்வேன்,'' என அவனி லெக்கேரா தெரிவித்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் (ஆக. 28-செப். 8) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் அவனி லெக்கேரா உட்பட 84 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ராஜஸ்தானை சேர்ந்தவர் அவனி லெக்கேரா, 22. தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கினார். இடுப்பு பகுதிக்கு கீழ் பாதிக்கப்பட, 'வீல் சேர்' வாழ்க்கைக்கு மாறினார். தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஜொலித்தார். டோக்கியோ பாராலிம்பிக்கில் (10 மீ., ஏர் ரைபிள், எஸ்.எச் 1 பிரிவு) தங்கம் வென்று வரலாறு படைத்தார். 50 மீ., ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் வெண்கலம் வென்றார். மீண்டும் சாதிக்கும் இலக்குடன் பாரிஸ் பாராலிம்பிக்கில் களமிறங்குகிறார்.அவனி கூறுகையில்,''விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு சென்றேன். படிப்புடன் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்வு செய்ய வேண்டுமென பெற்றோர் விரும்பினர். உள்ளரங்கு போட்டி என்பதால், துப்பாக்கி சுடுதலை தேர்வு செய்தேன். போகப் போக துப்பாக்கி சுடுதல் ரொம்பவும் பிடித்து போனது. 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் (எஸ்எச்1) உலகின் 'நம்பர்-1' வீராங்கனை ஆனேன். டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றதால், இம்முறை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளது. கடந்த மார்ச்சில் எனது பித்தப்பையில் பிரச்னை ஏற்பட்டது. இதற்காக 'ஆப்பரேஷன்' செய்து கொண்டேன். இதிலிருந்து மீள ஒன்றரை மாதம் தேவைப்பட்டது. மீண்டும் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பாரிசில் சக வீராங்கனை மோனா அகர்வாலும் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்கிறார். இதை ஆரோக்கியமான போட்டியாக கருதுகிறேன். இருவரும் பதக்கம் வெல்ல முயற்சிப்போம்,''என்றார். வெயிலா...பாரிசில் வெயில் கொளுத்துகிறது. சமீபத்திய ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய நட்சத்திரங்களுக்காக 'போர்ட்டபிள் ஏசி' அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவனி கூறுகையில்,''வெப்ப பூமியான ராஜஸ்தானில் பயிற்சி எடுத்த அனுபவம் உண்டு. எனக்கு பாரிஸ் வெயில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது,''என்றார்.'துாணா' மோனாராஜஸ்தானை சேர்ந்த இன்னொரு 'பாரா' துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மோனா அகர்வால். 9 மாத குழந்தையாக இருந்த போது கொடுத்த போலியோ சொட்டு மருந்து ஒத்துக் கொள்ளாததால், இவரால் நடக்க முடியாமல் போனது. 'வீல் சேர்' வீராங்கனையாக மாறினார். பாரா குண்டு, ஈட்டி, வட்டு எறிதல், வலு துாக்குதலில் அசத்தினார். பின் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு மாறினார். 'வீல் சேர்' கூடைப்பந்து வீரரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. சமீபத்தில் கணவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சோகங்களை கடந்து, டில்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்(10 மீ., ஏர் ரைபிள்) தங்கம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் சீனியர் வீராங்கனையாக களமிறங்குகிறார் மோனா, 37. இவர் கூறுகையில்,'நானும் என் கணவரும் மாற்றுத்திறனாளிகள். எங்களது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருவதே இலக்கு. பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதிப்பேன்,''என்றார்.