உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / என்னென்ன தியாகம்... அன்டில் செய்த யாகம் * தங்கம் வென்ற ரகசியம்

என்னென்ன தியாகம்... அன்டில் செய்த யாகம் * தங்கம் வென்ற ரகசியம்

பாரிஸ்: ''உடல் எடை குறைக்க இனிப்பு உணவை தியாகம் செய்தேன். இரவெல்லாம் துாங்கவில்லை. சோதனை கடந்து மீண்டும் தங்கம் வென்றேன்,''என சுமித் அன்டில் தெரிவித்தார்.ஹரியானாவை சேர்ந்தவர் சுமித் அன்டில். 17வது வயதில் இவரது பைக் மீது டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தார். இடது காலின் கீழ் பகுதி அகற்றப்பட, மல்யுத்த வீரர் கனவு தகர்ந்தது. பின் மனம் தளராமல் பாரா ஈட்டி எறிதலில் களமிறங்கினார். 2023ல் ஹாங்சுவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் 73.29 மீ., எறிந்து புதிய உலக சாதனை படைத்தார்.பாராலிம்பிக் சாதனைநேற்று பாரிஸ் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் (எப் 64 பிரிவு) அசத்தினார். 70.59 மீ., துாரம் எறிந்து, தனது சொந்த பாராலிம்பிக் சாதனையை தகர்த்து தங்கம் வென்றார். கடந்த முறை டோக்கியோவில் (2021) 68.55 மீ., எறிந்து தங்கம் வென்றிருந்தார். பாராலிம்பிக்கில் தங்கத்தை தக்க வைத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.அன்டில் 26, கூறியது:அதிக உடல் எடை காரணமாக, ஈட்டி எறியும் போது எனது முகுது தண்டுவடத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதாக 'பிசியோதெரபிஸ்ட்' விபின் கூறினார். இதையடுத்து எனக்கு பிடித்த இனிப்பு வகை உணவுகளை தியாகம் செய்தேன். சரியான உணவு முறையை கடைபிடித்தேன். 10-12 கிலோ எடை குறைத்தேன்.பாரிஸ் போட்டியின் போது 100 சதவீத உடற்தகுதியுடன் இல்லை. வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொண்டு பங்கேற்றேன். இந்தியா திரும்பியதும் எனது முதுகு வலி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும்.எதிர்பார்ப்பு அதிகம்டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்கும் போது என்னை பற்றி யாருக்கும் தெரியாது. எவ்வித நெருக்கடியும் இல்லாமல் தங்கம் வென்றேன். இம்முறை என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்ததால், பதட்டமும் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக 3 நாள் சரியாக துாங்கவில்லை. இறுதியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தது. ஆனாலும் எனது உலக சாதனைக்கும் (73.29 மீ.,) குறைவான துாரத்தில் எறிந்தது சற்று ஏமாற்றம் தான். வரும் போட்டிகளில் இன்னும் அதிக துாரம் ஈட்டி எறிய முயற்சிப்பேன்.இவ்வாறு அன்டில் கூறினார்.நீரஜ் 'அட்வைஸ்'பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். இவரை போல பாராலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார் சுமித் அன்டில்.இது குறித்து அன்டில் கூறுகையில்,''நானும் நீரஜும் நல்ல நண்பர்கள். அடிக்கடி பேசிக் கொள்வோம். சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என சபதம் ஏற்போம். பாரிஸ் போட்டிக்கு முன் எனக்கு பிரத்யேக 'மெசேஜ்' அனுப்பி இருந்தார் நீரஜ். அதில்,'போட்டியின் போது எதையும் புதிதாக முயற்சிக்க வேண்டாம். வழக்கமான பாணியில் ஈட்டி எறியவும்' என தெரிவித்து இருந்தார். இதை பின்பற்றி சாதித்தேன். ஈட்டி எறிதலின் நுணுக்கங்களை மாற்றினால் சிக்கல் ஏற்படும். இதை மனதில் வைத்து தான் நீரஜ் ஆலோசனை கூறி இருப்பார் என நினைக்கிறேன்,''என்றார்.'ஹாட்ரிக்' இலக்குஅன்டில் கூறுகையில்,''ஈட்டி எறிதலில் 31-32 வயது வரை சிறப்பாக செயல்படலாம். எனது கனவு இலக்கான 80 மீ., துாரத்தை விரைவில் எட்டுவேன். டோக்கியோ, பாரிசை தொடர்ந்து லாஸ் எஞ்சல்ஸ் (2028) பாராலிம்பிக்கிலும் சாதித்து, 'ஹாட்ரிக்' தங்கம் வெல்வேன். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல காத்திருக்கிறேன்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை