டேபிள் டென்னிஸ்: பவினா படேல் தங்கம்
வலாடிஸ்லாவோவோ: உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடரில் தங்கம் வென்றார் இந்தியாவின் பவினா படேல்.போலந்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் பவினா படேல் 39. டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா, காலிறுதியில் 3-1 (8-11, 11-7, 11-6, 11-9) என தென் கொரியாவின் ஜங் யங்கை வீழ்த்தினார்.அடுத்து நடந்த அரையிறுதியில் தென் கொரியாவின் மூன் சங்யேவை சந்தித்தார். இதில் பவினா 3-1 என (11-8, 11-7, 8-11, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பவினா, பிரான்சின் புளோரா வாட்டியரை எதிர்கொண்டார். முதல் செட்டை பவினா 11-6 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 11-5 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய பவினா, மூன்றாவது செட்டை 11-9 என வென்றார். முடிவில் பவினா, 3-0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.