| ADDED : நவ 29, 2024 09:49 PM
நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி 30-42 என ஹரியானாவிடம் தோல்வியடைந்தது.இந்தியாவில், புரோ லீக் கபடி 11வது சீசன் நடக்கிறது. உ.பி., மாநிலம் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், ஹரியானா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 10-13 என பின்தங்கி இருந்தது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்த ஹரியானா அணி 29 புள்ளி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு 20 புள்ளி மட்டும் கிடைத்தது.ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 30-42 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (11 புள்ளி), நிதேஷ் குமார் (5) கைகொடுத்தனர். ஹரியானா சார்பில் வினய் 9, நவீன், ராகுல் தலா 6, ஷிவம் 5 புள்ளி பெற்றனர்.இதுவரை விளையாடிய 13 போட்டியில், 5 வெற்றி, ஒரு 'டை', 7 தோல்வி என 33 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. ஹரியானா அணி 56 புள்ளிகளுடன் (11 வெற்றி, 3 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது.