உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / கோப்பை வென்றார் சுமித் நாகல்: சென்னை ஓபனில் அசத்தல்

கோப்பை வென்றார் சுமித் நாகல்: சென்னை ஓபனில் அசத்தல்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் இத்தாலியின் நார்டியை வீழ்த்தினார்.சென்னையில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் லுாகா நார்டி மோதினர். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய சுமித் நாகல், இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 40 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சுமித் நாகல் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்.இது, ஏ.டி.பி., சாலஞ்சர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் கைப்பற்றிய 5வது சாம்பியன் பட்டம். இதற்கு முன் பெங்களூரு (2017), அர்ஜென்டினா (2019), இத்தாலி (2023), பின்லாந்தில் (2023) நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் தொடரில் கோப்பை வென்றிருந்தார். சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் இவர், 2வது சுற்று வரை சென்றிருந்தார்.

'டாப்-100' வரிசை

ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுமித் நாகல், 121வது இடத்தில் இருந்து முதன்முறையாக 98வது இடத்துக்கு முன்னேறுகிறார். இதன்மூலம் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 'டாப்-100' வரிசையில் இடம் பிடித்த 10வது இந்திய வீரர் என்ற பெருமை பெறுகிறார். கடைசியாக 2019ல் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் இம்மைல்கல்லை எட்டியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ