உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஸ்வியாடெக், அல்காரஸ் வெற்றி: யு.எஸ்., ஓபன் டென்னிசில்

ஸ்வியாடெக், அல்காரஸ் வெற்றி: யு.எஸ்., ஓபன் டென்னிசில்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், ஸ்பெயினின் அல்காரஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் கமில்லா ராகிமோவா மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-4, 6-3 என சகவீராங்கனை ஷெல்பி ரோஜர்சை வீழ்த்தினார்.ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை தோற்கடித்தார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் டேனியல் கோலின்ஸ், கனடாவின் பியான்கா, பிரிட்டனின் எம்மா ரடுகானு தோல்வியடைந்தனர்.கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ரஷ்யாவின் அனஸ்டாசியா பவுலிசென்கோவா, செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா வெற்றி பெற்றனர்.அல்காரஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் லி டு மோதினர். அசத்தலாக ஆடிய அல்காரஸ் 6-2, 4-6, 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர் 2-6, 6-2, 6-1, 6-2 என அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை தோற்கடித்தார்.மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ், அமெரிக்காவின் டாமி பால், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் வெற்றி பெற்றனர். சுவிட்சர்லாந்தின் வான்ரின்கா, கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், கனடாவின் ஷபோவலோவ் தோல்வியை தழுவினர்.

5 மணி நேரம், 35 நிமிடம்

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் பிரிட்டனின் டேனியல் ஈவன்ஸ், ரஷ்யாவின் கரேன் கச்சானோவ் மோதினர். ஐந்து மணி நேரம், 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஈவன்ஸ் 6-7, 7-6, 7-6, 4-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் யு.எஸ்., ஓபன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடத்த போட்டி என்ற வரலாறு படைத்தது. இதற்கு முன் 1992ல் சுவீடனின் ஸ்டீபன் எட்பர்க், அமெரிக்காவின் மைக்கேல் சாங் மோதிய அரையிறுதி 5 மணி நேரம், 26 நிமிடம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ