| ADDED : ஆக 26, 2011 12:49 AM
அரியலூர்: அரியலூரில் மாவட்ட அளவிலான இரண்டு நாள் ஹாக்கி போட்டிகள் நடக்கிறது.அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:நடப்பு 2011-2012ம் ஆண்டுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகளை வரும் 27 மற்றும் 28 தேதிகளில், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் ஹாக்கி கிளப்களில் உள்ள ஹாக்கி அணியினர், மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு, தங்களது அணி பற்றிய விபரத்தை, அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம், வரும் 27ம் தேதி காலை 7 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர் போட்டி முறையில் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில், அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெறும் அணி, திருச்சியில் நடக்கும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இடையே, மண்டல அளவிலான ஹாக்கி லீக் சாம்பியன் ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வர்.