உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் விதிமீறி வைக்கப்பட்ட பேனர் சாலையில் சரிந்த சவுக்கு கட்டை சாரங்கள்

செங்கையில் விதிமீறி வைக்கப்பட்ட பேனர் சாலையில் சரிந்த சவுக்கு கட்டை சாரங்கள்

மறைமலை நகர்:செங்கை மற்றும் புறநகர் பகுதிகளில், தொடர்ந்து விதிமீறி பேனர் வைப்பது தொடர்ந்து வருகிறது.குறிப்பாக, செங்கல்பட்டு, மகேத்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில், நாளுக்கு நாள் அரசியல் கட்சி பேனர்கள் அதிகரித்து வருகின்றன.அதுமட்டுமின்றி நடிகர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகளின் விளம்பர பேனர்கள் சாலையோரம் உள்ள கட்டடங்கள் மீது, இரும்பு சாரங்கள் அமைத்து வைக்கப்பட்டு வருகின்றன.செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலை, அதிக வாகனங்கள் சென்று வரும் குறுகலான சாலை என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.இந்த சாலையில், பல இடங்களில் பேனர்கள் மற்றும் பேனர் வைக்கும் சவுக்கு கட்டைகளால் ஆன சாரங்கள் உள்ளன. நேற்று காலை, செங்கல்பட்டு வேதாசலம் நகர், அசோகன் தெரு பழைய ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த சவுக்கு மர சாரங்கள், செங்கல்பட்டு நகராட்சி குப்பை வண்டி மோதி சாலையில் சரிந்தது.நல்வாய்ப்பாக, வாகன ஓட்டிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த செங்கல்பட்டு காவல் நிலைய போலிஸ்காரர் ஒருவர், பொது மக்கள் உதவியுடன் சவுக்கு கட்டைகளை சாலையில் இருந்து அகற்றினார்.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:செங்கல்பட்டு நகரை பொறுத்தவரை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், பாதசாரிகள் பள்ளி குழந்தைகள் நடந்து செல்ல, முறையாக நடைபாதை இல்லை.அதனை ஆக்கிரமிப்பு செய்து நடைபாதை கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் பேனர்கள் வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வண்ண வண்ண பேனர்களால், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இவற்றை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சின்னம்மாபேட்டையில் சோகம்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில், பேருந்து நிறுத்தம் எதிரில், புரட்சி பாரதம் கட்சி சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை விழுந்ததில் தாய், மகன் காயம் அடைந்தனர்.சின்னம்மாபேட்டையை சேர்ந்த இளைஞரணி பொறுப்பாளர்கள், புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் மூர்த்தி மறைவை அனுசரிக்கும் விதமாக, சின்னம்மாபேட்டை ரயில் நிலையம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளிட்ட பகுதிகளில், அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர். பேருந்து நிறுத்தம் எதிரில் இருந்த விளம்பர பதாகை, திடீரென காற்றில் சரிந்தது. அப்போது, டி.வி.எஸ்., அப்பாச்சி இருசக்கர வாகனத்தில், ரயில் நிலையம் நோக்கி சென்ற சந்தோஷ், 25, மற்றும் அவரது தாய் நீலவேணி, 43, மீது, விளம்பர பதாகை விழுந்தது. விளம்பர பதாகை நிறுத்த அமைக்கப்பட்ட ரீப்பர் கட்டை சந்தோஷ் தலையில் விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தலையில் 8 தையல் போடப்பட்டது. அவரது தாய், லேசான காயங்களுடன் தப்பினார். அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கிறது. பேனர் வைக்க உரிய கட்டுப்பாடு மற்றும் அனுமதியின்றி வைப்போர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ