ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவல் திருவள்ளூரில் வாகனங்களுக்கு கெடுபிடி
திருத்தணி,ஆந்திர மாநிலம், மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில், கர்னுால் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், பறவைக் காய்ச்சலால் பல ஆயிரக்கணக்கான கோழிகள் பலியாகி வருகின்றன.ஆந்திராவை ஒட்டி இருப்பதாலும், பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு பரவும் என்பதாலும், தமிழக எல்லையோர மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை, கால்நடை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், ஆந்திர மாநில எல்லையோரமான திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி பொன்பாடி, ஊத்துக்கோட்டை பெரியபாளையம் மற்றும் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் சோதனைச்சாவடி என, மூன்று இடங்களில், கடந்த வாரம் முதல், கால்நடை துறை சார்பில், சிறப்பு முகாம்கள் அமைத்துள்ளனர்.கால்நடை துறையில் ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் வீதம், 24 மணி நேரமும், மூன்று ஷிப்ட் அடிப்படையில், ஆந்திரா பகுதியில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து கிருமி நாசினி தெளித்த பின், தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.இந்த சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வெளிமாநில வாகனங்கள், எடுத்து வரப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை, பதிவேட்டில் குறிப்பிடுகின்றனர். தவிர, வாகனங்களை சோதனை செய்த பின், வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி அடித்த பின், மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.இதுகுறித்து, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் தாமோதரன் கூறியதாவது:ஆந்திரா மாநிலத்தில் இருந்து, முட்டை, இறைச்சி கோழி மற்றும் கோழி தீவனங்கள் எடுத்து வரப்படும் வாகனங்களை முழுமையாக கண்காணித்து, கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கிறோம்.நோய் பாதிப்பு பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் என்றால், அவற்றை திருப்பி அனுப்பி விடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.