கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிசிஸ் மையம் திறப்பு
மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், மண்ணிவாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, 66 லட்சம் ரூபாய் மதிப்பில் மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையம் மற்றும் தனியார் நன்கொடை வாயிலாக அமைக்கப்பட்டு உள்ள 1 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டணமில்லா இலவச டயாலிசிஸ் மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் பானுமதி, கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.