மாமல்லையில் பேரூராட்சி இறுதி கூட்டம்
மாமல்லபுரம்,மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற இறுதிக்கூட்டம், நேற்று நடந்தது.மாமல்லபுரம் பேரூராட்சி, கடந்த 1964 முதல், நகரியமாக செயல்பட்டது. பல்லவர் கால பாரம்பரிய சிற்பக்கலை சுற்றுலா இடமாக விளங்கும் இப்பகுதியின் மேம்பாடு கருதி, நகராட்சி நிர்வாக துறையின் கீழ், சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியாக, 1994ல் தரம் உயர்த்தப்பட்டது. மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகளுடன், 15 வார்டுகள் உள்ளன. கடந்த 1996 முதல், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, பேரூராட்சி மன்றம் செயல்படுகிறது.இப்பகுதியின் முன்னேற்றம், சுற்றுலா சிறப்பு கருதி, தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, பேரூராட்சி மன்றமும், நகர மன்றமாக மாற்றமடையும். இந்நிலையில், பேரூராட்சி மன்ற இறுதிக்கூட்டம், தலைவர் வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் சந்திரகுமார், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இங்கு இறுதியாக பணியாற்றி விடைபெறும் செயல் அலுவலருக்கு, வாழ்த்து தெரிவித்தனர். அடுத்த கூட்டம், நகர மன்ற கூட்டமாக நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.