படகில் மயங்கிய மீனவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
சதுரங்கப்பட்டினம்,கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூரைச் சேர்ந்தவர் முனுசாமி, 48; மீனவர். இவர் நேற்று முன்தினம் காலை, அதே பகுதி மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்கச் சென்றார். மீன் பிடித்த போது, திடீரென மயங்கி படகில் விழுந்த அவர், அங்கிருந்த பலகையில் மோதிக் கொண்டார். சக மீனவர்கள் அவரை மீட்டு, சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அன்று இரவு உயிரிழந்தார்.சதுரங்கப்பட்டினம் போலீசில் இவரது மகன் ஆகாஷ் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.