உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு புறம்போக்கு நிலம் விற்பனை ரூ.1.19 கோடி மோசடி: 4 பேர் கைது

அரசு புறம்போக்கு நிலம் விற்பனை ரூ.1.19 கோடி மோசடி: 4 பேர் கைது

ஆவடி,பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கோபரசநல்லுாரைச் சேர்ந்தவர் சிவகுமார், 50. இவர், ஜன., 21ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார்:நான் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை வைத்து, சென்னையில் நிலம் வாங்க, வானகரம் மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்த வாசு என்பவரை அணுகினேன். அவர், பூந்தமல்லி, முப்பத்தெட்டு தாங்கல் பிரதான சாலை, அம்பேத்கர் நகரில் 50 சென்ட் நிலம் இருப்பதாக கூறினார். சென்ட், 11,000 ரூபாய் என, 55 லட்சம் ரூபாய் விலை பேசினார். அதன்படி, வாசு உட்பட அவர் சொன்ன நபருக்கு, 15 லட்சம் ரூபாய் கொடுத்தேன். என் பெயரில் போலியான கிரைய பத்திரம் எழுதிக் கொடுத்தார். வாசு தன் மகன் பிரேம்குமாரை நிலத்தரகர் என அறிமுகம் செய்து, 10.60 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். பின், கோயம்பேடில், 51 சென்ட் நிலம் இருப்பதாக கூறினர். நிலத்தின் உரிமையாளர் கிளாடி, அவரது கணவர் அண்ணாதுரை, பவர் ஏஜென்ட் ராஜன், இடைத்தரகர் தெய்வ மலர் ஆகியோர், மேற்படி நிலத்தை, 5.75 கோடி ரூபாய் என விலை பேசி, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி விற்றால், பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, முன்பணமாக, 32 லட்சம் ரூபாய் பெற்றனர். பட்டா வாங்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து வாசுவை விடுவிக்க, 50.50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். இந்நிலையில், கோயம்பேடு நிலத்தை விற்க முயன்றபோது, அது அரசு புறம்போக்கு நிலம் என தெரிந்தது. எனவே, என்னை ஏமாற்றி, 1.19 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த வானகரத்தை சேர்ந்த வாசு, 62, பிரேம் குமார், 38, நெற்குன்றத்தை சேர்ந்த அண்ணாதுரை, 55, கொரட்டூரை சேர்ந்த தெய்வ மலர், 47, ஆகிய நான்கு பேரை நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில், தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ