வீட்டுமனை பட்டா திட்டம் துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 280 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில், 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 497 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 508 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, 50,606 பயனாளிகளுக்கு, முதல்வர் வழங்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நெடுங்காலமாக வீடு கட்டி குடியிருக்கும் 214 நபர்களுக்கு, நிலங்களை வரன்முறைப்படுத்தி, பட்டாக்கள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கடந்த பிப்., 10ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 'பெல்ட் ஏரியா' மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிட முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்காக, மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப்பணிகளை துவங்க, ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், 214 நபர்களின் நிலத்தை வரன்முறைப்படுத்தி, அவர்களுக்கு பட்டாக்களை வழங்கி, நகர்ப்புறப் பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.திருக்கழுக்குன்றத்தில், முதல்வர் ஸ்டாலின், மழையிலும் நடந்து, நேற்று காலை மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.