உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடை எண், முகவரி இல்லாத டாஸ்மாக் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையா?

கடை எண், முகவரி இல்லாத டாஸ்மாக் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையா?

கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு முகவரி, கடை எண் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லாத நிலையில், விற்பனை படுஜோராக நடக்கிறது. மேலும், இரண்டு படுக்கை அறை உள்ள வீட்டில் டாஸ்மாக் கடை திறந்து, அரசே சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள ஜி.எஸ்.டி., சாலையில், சங்கர வித்யாலயா பள்ளி எதிரே, சிக்னல் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதை கண்டித்து, கடந்த 18ம் தேதி காலை, பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடம் வந்து, பேச்சு நடத்திய பின், பெண்கள் கலைந்து சென்ற நிலையில், அன்று மதியம் முதல் மது விற்பனை துவங்கியது.இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடை எவ்வித முகவரியும் இல்லாமலும், கடை எண் இல்லாமலும் இயங்கி வருவதால், சட்டத்திற்கு புறம்பாக அரசே மது விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தற்போது திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு அரசால் ஒதுக்கப்பட்ட கடை எண், முகவரி உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை. இரண்டு படுக்கை அறைகள் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து, கடை மற்றும் மதுக்கூடம் செயல்படுகிறது.வணிக ரீதியாக செயல்படும் இடத்திற்கு மின் கட்டணம் அதிகம். இங்கு செயல்படும் கடைக்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, வீட்டு பயன்பாட்டிற்கு உரிய மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை மின்வாரியம் தெரிவிக்க வேண்டும்.மேலும் பள்ளி எதிரே, 100 மீட்டர் தொலைவிற்குள், ஜி.எஸ்.டி., நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை திறந்துள்ளதால், பள்ளி மாணவர்கள், பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவர்.தவிர, குடிமகன்கள் தொல்லையால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவர். எனவே, இந்த இடத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ