கல்பாக்கம் பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார மணல்மேடு அகற்றம்
புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் பகிங்ஹாம் கால்வாய்க்கரையோர வீடுகளை வெள்ளம் சூழாமல் தடுக்க, கல்பாக்கம் கடற்கரை முகத்துவார மணல்மேடு அகற்றப்பட்டது.கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் வாயலுார் ஆகிய ஊராட்சி பகுதிகளில், பகிங்ஹாம் கால்வாய் கடக்கிறது. புதுப்பட்டினம் பகுதியில், பெரியார் நகர், ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகள், வாயலுார், உய்யாலிகுப்பம் ஆகிய பகுதிகள் கால்வாயை ஒட்டியுள்ளன.வடகிழக்கு பருவமழை, வங்க கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வுநிலை, புயல் ஆகிய காலங்களில் பெய்யும் கனமழையால், கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, பல நாட்கள் நீர் வடியாமல், அப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர்.அவ்வாறு வெள்ளம் சூழும்போது, அதை வடிய வைக்க, கல்பாக்கம் நகரிய பகுதியில் உள்ள கால்வாய் முகத்துவார மணல் அடைப்பை, புல்டோசர் வாயிலாக வெட்டி அகற்றி, கால்வாய் வெள்ளம் கடலுக்குள் விடப்படும்.தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகத்துவார மணல்மேடு அடைப்பை நீக்கி, கடலுக்கு மழைவெள்ளம் செல்லும் வகையில் கால்வாயும் வெட்டப்பட்டுள்ளது.