உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூருக்கு புது அரசு கலை கல்லுாரி பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு

செய்யூருக்கு புது அரசு கலை கல்லுாரி பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு

செய்யூர்:'செய்யூரில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்' என, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால், இப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில், 127 கிராமங்கள் உள்ளன. இதில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மாவட்டத்திலேயே, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக செய்யூர் பகுதி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மூன்று கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.செய்யூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு வட்டங்களை உள்ளடக்கி, மதுராந்தகம் கல்வி மாவட்டம் செயல்படுகிறது.மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு, 5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லுாரிக்குச் செல்கின்றனர்.ஆனால், பல ஆண்டுகளாக செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி இல்லாததால், மாணவ - மாணவியர் கல்லுாரிக்காக சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மதுராந்தகம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ - மாணவியர், அரசு கலைக் கல்லுாரிக்காக செங்கல்பட்டு செல்கின்றனர். குறிப்பாக, செய்யூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க, செங்கல்பட்டு அரசு கலைக்கல்லுாரியை மட்டுமே நம்பி உள்ளனர்.சித்தாமூர் ஒன்றியம் மற்றும் அச்சிறுபாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள், திண்டிவனம் பகுதியில் செயல்படும் அரசு கலைக் கல்லுாரியில் சேர வேண்டிய நிலை உள்ளது.செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில் 'சீட்' கிடைக்காதவர்கள், தனியார் கல்லுாரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.கிராமங்களில் இருந்து கல்லுாரிக்காக நீண்ட துாரம் பயணம் செய்யும் நிலை உள்ளதாலும், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளதாலும், மாணவர்களுக்கு கல்லுாரி படிப்பு எட்டாக்கனியாக இருந்து வருகிறது.இதனால், மாணவ - மாணவியரின் நலன் கருதி, செய்யூர் பகுதியில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த 2022ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், 'ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு அரசு கலைக் கல்லுாரி அமைக்கப்படும்' என, அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.இதையடுத்து, செய்யூரில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க, செய்யூர் வருவாய்த் துறையினர் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தனர்.இதுதொடர்பாக, உயர் கல்வித் துறைக்கு வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்தனர். ஆனால், உயர் கல்வித்துறையினர் இதை கண்டுகொள்ளமால், கிடப்பில் போட்டனர். இதுதொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டசபையில் நேற்று, பட்ஜெட் அறிவிப்பில், 'செய்யூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும்' என, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.நீண்ட கால கோரிக்கைக்கு விமோசனம் கிடைத்ததால், செய்யூர் மற்றும் சுற்றுப்பகுதியினர், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி, அரசு கலைக் கல்லுாரியை உடனே துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.செய்யூர் தாலுகா, தலைநகரான சென்னைக்கு அருகில் இருந்தாலும், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.மகளிர் நீண்ட துாரம் பயணம் செயது, தனியார் கல்லுாரிகளில் கல்வி கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. செய்யூரில் அரசு கலைக்கல்லுாரி துவங்க வேண்டும் என்பது, பன்னெடுங்காலமாக தேங்கிக் கிடந்த கோரிக்கை. தமிழக பட்ஜெட்டில் செய்யூர் அரசு கலைக் கல்லுாரிக்கான அறிவிப்பு வந்தது, பல தலைமுறைகளின் முன்னேற்றத்திற்கு அடிகோலும். மக்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திய 'தினமலர்' நாளிதழ் மற்றும் அரசுக்கு நன்றி.-எல்.எஸ்.ரவீந்திரநாத்,கல்வி ஆர்வலர்,செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை