உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எண்ணுார் துறைமுகத்தில் புதிய முனையம்; ஒப்புதல் தர ஒழுங்குமுறை குழுமம் பரிந்துரை

எண்ணுார் துறைமுகத்தில் புதிய முனையம்; ஒப்புதல் தர ஒழுங்குமுறை குழுமம் பரிந்துரை

சென்னை : எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் மணல், நிலக்கரி, உரம் போன்ற பொருட்களை கையாள புதிய முனையம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு, தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமம் பரிந்துரைத்துள்ளது. சென்னை அடுத்த எண்ணுாரில், காமராஜர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சரக்கு போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இத்துறைமுகத்தில் தற்போது, 9 தளங்களில் மணல், நிலக்கரி, யூரியா போன்ற பொருட்கள் மொத்தமாக கையாளப்பட்டு வருகின்றன. இங்கு கையாளும் சரக்குகளின் அளவு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் இடவசதியை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, இங்கு சரக்குகளை மொத்தமாக கையாளும் வகையில், புதிய முனையம் அமைப்பதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக, கடலுக்குள் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 14.39 லட்சம் சதுர அடி அளவுக்கு, இதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமத்திடம் அனுமதி கோரி, துறைமுக நிர்வாகம் விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பம் மீதான ஆய்வு அடிப்படையில், தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமம் பிறப்பித்த உத்தரவு: இத்திட்டத்தில், கடலின் உள் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமத்திடம் தான் உள்ளது.எனவே, வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில், 8 நிபந்தனைகள் விதித்து, இந்த விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.அதே நேரம், சென்னை உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, புதிதாக கட்டப்படும் முனையத்தில் நிலக்கரி, இரும்புத்தாது ஆகியவற்றை கையாளக் கூடாது.மேலும், பசுமை துறைமுகத்துக்கான விதிமுறைகளை இதில் கடைபிடிக்க வேண்டும் என்றும், கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை