வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, காரணைப்புதுச்சேரி பிரதான சாலையில், அரசு மதுபான கடை உள்ளது. இந்த டாஸ்மாக் மற்றும் பாரில் பணிபுரியும் ஊழியர்கள், ராஜிவ் காந்தி நகரில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.அவர்கள், தங்களது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிகாலையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:காரணைபுதுச்சேரி சுற்றுப்பகுதிகளில், டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் தவிர்த்து, மற்ற அனைத்து நேரங்களிலும், அருகில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் ஊழியர்கள் வீடுகளில் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.அப்பகுதியில், மதுப்பிரியர்கள அதிகாலையிலேயே குவிந்து விடுகின்றனர். இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிகாலையிலேயே அதிக விலைக்கு விற்போர் மீது, மாவட்ட நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.