திருக்கழுக்குன்றம் பிரதான சாலைகளில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் டூ - வீலர்கள்
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், செங்கல்பட்டு - சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் - கருங்குழி ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.இங்கு, தாலுகா, வட்டார வளர்ச்சி, சார் - பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்குகின்றன.தாலுகா பகுதிக்கு பிரதான வர்த்தக இடமாக, திருக்கழுக்குன்றம் திகழ்வதால், சுற்றுப்புற பகுதியினர், இச்சாலைகளில் அதிக அளவில் சென்று வருகின்றனர்.அதில், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் வரும் நிலையில், குறுகிய சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, தங்களின் டூ - வீலர்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.குறிப்பாக, சதுரங்கப்பட்டினம் சாலையில், கம்மாளர் தெரு சந்திப்பு முதல், கருங்குழி சாலை சந்திப்பு வரை, இருசக்கர வாகனங்கள் நீண்டநேரம் நிறுத்தப்படுகின்றன.அதனால், அச்சாலையில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து முடங்குகிறது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனமும், இச்சாலையில் நெரிசலில் சிக்கி தத்தளிப்பது தொடர்கிறது.அதுமட்டுமின்றி, பாதசாரிகள், சாலையின் மையத்தில் விபத்து அபாயத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்பகுதியில் தொடரும் போக்குவரத்து சிக்கலை தீர்க்க, சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்கவும், கடை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.