மாமல்லபுரத்தில் குவிந்த மகளிர் சுயஉதவி குழுவினர்
மாமல்லபுரம், மார்ச் 9-மாமல்லபுரத்தில், மகளிர் சுய உதவிக் குழுவினரால் சுற்றுலா களைகட்டியது. பல்லவர் கால கலைச்சின்னங்கள், மாமல்லபுரத்தில் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்நாடு, சர்வதேச பயணியரை கவர்ந்து, திரளானோர் வந்து கண்டு ரசிக்கின்றனர்.அந்த வகையில், அரசு விடுமுறை நாளான நேற்று, சுற்றுலா பயணியர் குவிந்தனர்.இது ஒருபுறமிருக்க, சர்வதேச மகளிர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பில், சென்னையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.இதில் பங்கேற்ற, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், மாமல்லபுரத்தில் குவிந்தனர்.குழு உறுப்பினர்கள், அந்தந்த குழுவிற்கான பிரத்யேக வண்ண புடவை அணிந்திருந்தனர். மாமல்லபுரம் கற்சிற்பங்களைக் கண்டு, குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, தொல்லியல் துறை, அனைவருக்கும் கட்டண விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.