114 கிலோ குட்கா பொருட்கள் செங்கையில் பறிமுதல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், 114 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.செங்கல்பட்டு, அண்ணா சாலையிலுள்ள ஒரு வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.சந்தேகத்தின்படி, அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்திலுள்ள மொட்டை மாடியில், போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு ஹான்ஸ், கூல்- லிப், பான் மசாலா உள்ளிட்ட, 114 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்தனர்.இதில், வடமாநில நபர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, புகையிலை பொருட்களை சுற்றுப்பகுதி கடைகளுக்கு விற்றது தெரிந்தது. போலீசார் வருவது தெரிந்ததும், சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தேடும் பணி நடக்கிறது.