15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீடு அனுமதி முடக்கம்: ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
திருப்போரூர் : செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்குரிய 15 வது நிதிக் குழு மானிய ஒதுக்கீடு அனுமதிக்காததால் ஊராட்சி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊராட்சிகளுக்கு 15 வது நிதிக்குழு மானியம் வழங்குகிறது. ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், 2025 -- 2026 ம் நிதியாண்டிற்கான பணிகள் தொடங்குவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்படாமல் உள்ளதாக ஊராட்சி தலைவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகள் உள்ளன.மத்திய அரசின் 15 வது நிதி குழு மானியத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பணிகள் மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் என்று பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இதில், குடிநீர் பணிகளுக்காக 30 சதவீதம், சுகாதாரப் பணிகளுக்காக 30 சதவீதம் மற்றும் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்காக 40 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், 2025 --2026 ம் நிதியாண்டு தொடங்கி ஏழு மாதங்கள் முடிவுற்ற நிலையில், இன்னும் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பணிகள் தொடங்குவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. மற்ற பல மாவட்டங்களில் இந்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இன்னும் நிர்வாக அனுமதிக்கான நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் வறட்சி காலத்தில் குடிநீர் பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் ஊராட்சி மக்கள் சிரமப்பட்டனர். தற்போது பருவ மழை தொடங்கியுள்ள நேரத்திலும் கிராம ஊராட்சிகள் தேர்வு செய்துள்ள சுகாதாரப் பணிகளான மழை நீர் வடிகால், தரைப் பாலங்கள், சமுதாய கழிப்பிடங்கள் உள்ளிட்ட பணிகளை துவங்க முடியாமலும் பொதுமக்களுக்கு பணியாற்ற முடியாமலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே பெரும்பாலான ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து வழங்கப்படும் ஊராட்சி பொது நிதி பெரும்பாலான ஊராட்சிகளுக்கு போதியதாக இல்லாத நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர் தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்ய முடியாமல் உள்ளது. தற்போது மத்திய அரசின் 15 வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கப்படும் பணிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் நிர்வாக அனுமதி வழங்கப்படாததால் உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்வது அறியாமல் தவிக்கின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 ஊராட்சிகளுக்கும் உடனடியாக 2025 - - 2026 ம் நிதி ஆண்டுக்கான 15 வது நிதிக்குழு மானியத்தில் தேர்வு செய்துள்ள பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.