கட்டணமின்றி 25 மாணவர்கள் தனியார் கல்லுாரிகளில் சேர்க்கை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரிகளில், 25 மாணவர்கள் சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டது.செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது.இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த முகாமில், தனியார் பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட கல்லுாரிகளில் சேர்க்கைக்கு, 125 மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.இந்த மனுக்களை பரிசீலனை செய்து, 25 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணையும், தனியார் கலை அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த இரண்டு கல்லுாரிகளில், ஐந்து மாணவர்களுக்கு முழு கல்லுாரி கட்டணம் விலக்குடன் ஆணை அளிக்கப்பட்டது.கல்வி கடன் வழங்க கோரிய, 14 மாணவர்களுக்கு, முன்னோடி வங்கி அலுவலர் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் வாயிலாக, கல்லுாரி கட்டணம் செலுத்தப்படும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.