ரத்தான 60 மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கம்
சென்னைசென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் -- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு வழித்தடங்களில் தினமும், 550 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒன்பது லட்சம்பேர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி நடக்க உள்ளதாக கூறி, கடந்த ஆண்டில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் தடத்தில் 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.அதேபோல், தாம்பரம்ரயில்வே பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக, கடற்கரை - தாம்பரம் தடத்தில் 20க்கும் மேற்பட்ட ரயில்களும், மறு அறிவிப்பு வரையில் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இதனால், வழக்கமாகச்செல்லும் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலில், பயணியர் சிக்கி அவதிப்படுகின்றனர். நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யாவிடம் கேட்ட போது, ''ரயில்பாதை உள்ளிட்ட பராமரிப்பு பணி காரணமாக, நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் இயக்கப்படும்,'' என்றார்.
கூடுதலாக நான்கு பெட்டிகள்
தாம்பரம் - மதுரை விரைவு ரயிலில், இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள் உட்பட, நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.மதுரை - தாம்பரம் சிறப்பு ரயிலில், நாளை முதல் மார்ச் 20 வரை, முன்பதிவு இல்லாத பெட்டிகள் இரண்டும்; மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் இரண்டும் இணைத்து இயக்கப்பட உள்ளது.அதேபோல், தாம்பரம் - மதுரை சிறப்பு ரயிலில், வரும் 7 முதல் மார்ச் 21 வரை, முன்பதிவு இல்லாத பெட்டிகள் இரண்டும்; மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் இரண்டும் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.