பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஆவடி,அம்பத்துார், வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் தேவி, 45. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நாளிதழ் ஒன்றில் வெளியான 'குறைந்த வட்டியில் வங்கி லோன் வாங்கி தரப்படும்' என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் போன் எண்ணில் அழைத்துள்ளார்.எதிர்முனையில், திருமுல்லைவாயிலைச் சேர்ந்த செபாஸ்டின், 44, என்பவர், அவரிடம் பேசியுள்ளார். அவர், எஸ்.எஸ்.என்.எல்., ஸ்மார்ட் அக்கவுன்ட் நிறுவனம் நடத்துவதாகவும், அதில், வங்கி பரிவர்த்தனை, ஐ.டி., ரிட்டன் மற்றும் 'சிபில் ஸ்கோர்' இல்லாமல், 1.50 பைசா வட்டியில், ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.மேலும், 'வாவ் புட் மேக்கர்ஸ்' என்ற நிறுவனம் நடத்துவதாகவும், இதில் முதலீடு செய்தால், 5 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.அதன்படி, 2 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதற்கு, முன்பணமாக 25,000 ரூபாய் மற்றும் அவரது வாவ் புட் மேக்கர்ஸ் நிறுவனத்தில், 5 லட்சம் ரூபாயை தேவி முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில், செபாஸ்டின், அவர் கூறியது போல் கடன் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.சந்தேகத்தின் படி விசாரித்தபோது, ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, இவரை போல், 70 பேரிடம் கடன் வாங்கி தருவது மற்றும் முதலீடு என்ற பெயரில் 50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரிந்தது.இது குறித்து தேவி, கடந்த டிச., 24ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான தனிப்படை போலீசார், 'சிசிடிவி' மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், துாத்துக்குடி, கே.டி.சி., நகரில் பதுங்கி இருந்த செபாஸ்டினை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.இவர்களை போல், 400 பேரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.