உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்

செங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 1965ம் ஆண்டு துவக்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக, 200 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இதில், அரசு மருத்துவக் கல்லுாரி, மாணவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு, மாணவர்கள் 400 பேர், முதுநிலை மாணவர்கள் 350 பேர் என, மொத்தம் 750 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.இதே வளாகத்தில், செவிலியர் கல்லுாரி மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர், விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன், கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைத்தனர்.இதில், மருத்துவக் கல்லுாரி சுற்றியுள்ள சுற்றுச்சுவரை, ஆங்காங்கே சமூக விரோத கும்பல் உடைத்து, மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மதுப்பிரியர்கள், போதை தலைக்கு ஏறியதும், பாட்டில்களை போட்டு உடைத்து விடுகின்றனர்.இப்பகுதி, சமூக விரோத கும்பல்களின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்கள் விளையாட பாதுகாப்பு இல்லாததால், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி மற்றும் தனியார் இடங்களில், விளையாடி வருகின்றனர். இதுமட்டும் இன்றி, மாணவர்கள் நடைபயிற்சி செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனை தவிர்க்க, மருத்துவக் கல்லுாரியை சுற்றிலும், சுற்றுச்சுவர் அமைக்க, அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, மருத்துவமனை நிர்வாகம் கருத்துரு அனுப்பியுள்ளது.அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பு நலன்கருதி, சுற்றுச்சுவர் அமைக்க, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி