சகதியாய் மாறிய தற்காலிக சாலை கருங்குழியில் போக்குவரத்து நிறுத்தம்
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், அப்பகுதிவாசிகள் மேம்பாலம் அமைக்கக்கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.படாளம் - கருங்குழி ரயில்வே நிலையங்களுக்கு இடையே, கிணார் - கீழவலம் சாலையில், கடவு எண் 64க்கு மாற்றாக, சாலை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.அதன்படி, 32.22 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டுமான பணி, கடந்த 2023ம் ஆண்டில் துவங்கி நடைபெற்று வருகிறது.மதுராந்தகத்திலிருந்து கருங்குழி வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் பகுதியில், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து நடந்தது.தற்போது, சமீபத்தில் பெய்த மழையால, அந்த சாலை சகதியாக மாறியிருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இந்த வழியாக, தடம் எண்: டி3, டி4 ஆகிய இரண்டு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தோட்டநாவல், கிணார், கே.கே.புதுார், ஏறுப்பாக்கம், இருசமநல்லுார், கத்திரிச்சேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், கருங்குழி பகுதியில் இறங்கி, பிற கிராம பகுதிகளுக்கு அப்பகுதிவாசிகள் நடந்து செல்கின்றனர். இதனால், அவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, சகதியாக மாறியுள்ள சாலையை சீரமைத்து, மீண்டும் பேருந்து சேவையை தொடர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.