உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அதிகாலையில் வெடித்த மின்மாற்றி துணிக்கடை எரிந்து நாசம்

அதிகாலையில் வெடித்த மின்மாற்றி துணிக்கடை எரிந்து நாசம்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், அதிகாலையில் மின்மாற்றி வெடித்து சிதறியதால், அருகிலிருந்த துணிக்கடையில் தீப்பற்றி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் நாசமாகின. கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே, 'பஞ்சாப் ஹேண்ட் லுாம்' என்ற துணிக்கடை உள்ளது. இந்த கடை அருகே உள்ள மின்மாற்றியில், நேற்று அதிகாலை 12:20 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. பின், திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. மின்மாற்றியில் இருந்து, அருகிலுள்ள துணிக்கடையின் மீது தீப்பொறி விழுந்து, துணிக்கடை எரியத் துவங்கியது. அப்போது, கடையின் உள்ளே துாங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் எட்டு பேர், பதறியடித்து வெளியே ஓடி வந்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்த தகவலின்படி, மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைக்க போராடினர். ஒரு மணி நேரம் போராடியும் தீ கட்டுக்குள் வராததால் மகேந்திரா சிட்டி, சிறுசேரி ஆகிய இடங்களிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். பின், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 5 மணி நேரம் போராடி, நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் தீயை முற்றிலுமாக அணைத்தனர். கூடுவாஞ்சேரி போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில், துணிக்கடையின் உள்ளே இருப்பு வைக்கப்பட்டிருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி ஆடைகள், துணிகள் எரிந்து நாசமாயின. தவிர, கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 'சுவிப்ட் செலோரியோ' காரும் சேதமானது. விபத்து குறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை