சாலை மையத்தடுப்பில் பரவி வளரும் பூச்செடிகளால் விபத்து அபாயம்
மறைமலை நகர்,சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது.இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் சென்று வருகின்றன.மேலும் ஆப்பூர், தெள்ளிமேடு, திருக்கச்சூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையின் மைய தடுப்பில், அரளி உள்ளிட்ட பூச்செடிகள் மற்றும் மரங்கள் அழகிற்காகவும், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்தவும் நடப்பட்டு உள்ளன.இவற்றை, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகம் பராமரித்து வருகிறது. தற்போது திருக்கச்சூர், கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பூச்செடிகள் மற்றும் மரங்கள், மையத்தடுப்பை மீறி சாலையில் அகலமாக, இருபுறமும் பரவி உள்ளன.இதனால், சாலை சந்திப்பு மற்றும் கடவுப்பாதைகளில் வாகனங்கள் கடக்கும் போது, நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள செடி மற்றும் மரங்களின் கிளைகளை வெட்டி சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.