உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கைவிடப்பட்ட கல் குவாரிகளால் அபாயம் வேலி அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கைவிடப்பட்ட கல் குவாரிகளால் அபாயம் வேலி அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சித்தாமூர்:சித்தாமூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கைவிடப்பட்ட தனியார் கல் குவாரிகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், அபாய நிலையில் உள்ள இடங்களில் தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். சித்தாமூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவம்பாக்கம், ஓணம்பாக்கம், தொன்னாடு உள்ளிட்ட பல கிராமங்களில், கடந்த ஆண்டுகளில் அரசு அனுமதி பெற்று தனியார் கல் குவாரிகள் இயங்கின. கல் குவாரிக்கான அனுமதிக் காலம் முடிந்ததால், அவை தற்போது கைவிடப்பட்ட கல் குவாரிகளாக மாறி, பயன்பாடின்றி அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த கைவிடப்பட்ட கல் குவாரிகள், 250 அடி ஆழத்திற்கும் அதிக பள்ளம் கொண்டதாக உள்ளன.இப்பள்ளங்களைச் சுற்றிலும் எவ்வித தடுப்புகளும், வேலிகளும் இல்லாததால், பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதனால், மலை மற்றும் மலையடிவாரங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், இந்த கல் குவாரி பள்ளம் அருகே செல்லும் போது மண் சரிந்து, பள்ளத்தில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழக்கின்றன. தடுப்பு வேலி அமைக்க பலமுறை வலியுறுத்தி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சித்தாமூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில், கடந்த ஆண்டுகளில் மலை மற்றும் குன்று பகுதிகளையொட்டி உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில், கல் குவாரிகள் செயல்படுத்தப்பட்டன. பின், அனுமதிக் காலம் முடிந்ததை அடுத்து, அந்த குவாரிகள் கைவிடப்பட்டன. கைவிடப்பட்ட கல் குவாரிகள், எதற்கும் பயன்பாடு இல்லாத இடமாக மாறி, அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. கல் குவாரி பள்ளங்களைச் சுற்றி தடுப்புகள் இல்லாததால், 10 ஆண்டுகளுக்கு முன் சரவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் துணி துவைக்க சென்ற போது, பள்ளத்தில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். சமீபத்தில், பசு ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து, மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகள் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழக்கின்றன. எனவே, பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரிகள் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முள் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை