உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் 69 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கம்

செங்கை மாவட்டத்தில் 69 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கம்

செங்கல்பட்டு: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், 69 ஊராட்சிகளில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவங்கி நடந்து வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 69 ஊராட்சிகளில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் துவங்கியுள்ளது. இத்திட்டத்தில், தரிசு நிலங்களை பயிர் சாகுபடிக்கு ஏற்ப மாற்ற, 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, ஒரு தொகுப்பாக அமைக்கப்படுகிறது.இங்கு பாசன வசதி செய்து, பலன் தரும் பழ மரங்கள் வைக்கவும், தரிசு நிலங்களில் உள்ள முட்செடிகளை அகற்றி சமன் செய்து உழுவதற்கும், 2.5 ஏக்கருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 9,600 ரூபாய் வரை மானியமாக, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விவசாய நிலங்களில், வரப்புகளில் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க 2.5 ஏக்கருக்கு, 5 கிலோ பயறு விதைகளுக்கு, 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக 300 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. சாகுபடி பயிருக்கு ஏற்றவாறு திரவ உயிர் உரங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும். 2.5 ஏக்கர் பரப்பிற்கு ஏற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவிலான 250 கிலோ தொழு உரம் மற்றும் பயிருக்கு ஏற்றவாறு பரிந்துரை செய்யப்பட்ட அளவிலான திரவ உயிர் உரங்கள் ஆகிய இரண்டையும் சேர்த்து, 50 சதவீத மானியம் அல்லது 450 ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். ஊராட்சிகளில் விசைத் தெளிப்பான்களுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது 3,000 ரூபாய், இதில் எது குறைவோ மானியத்தில் வழங்கப்படும். https://x.com/dinamalarweb/status/1948556892357492998விருப்பம் உள்ள விவசாயிகள், தங்களுக்கு தேவையானவற்றை, 'உழவன்' செயலில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிமை விபரம் பட்டா, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய விபரங்களுடன், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு, இதற்கு பதிவு செய்யலாம். வாழ்வாதாரம் மேம்படும் பழ வகைகள் சாகுபடி செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். விவசாயிகள், ஒரு ஏக்கரை மூன்று ஆண்டுகள் தரிசாக வைத்திருந்தால், தரிசு நில திட்டத்தில் பயன்பெறுவர். இத்திட்டத்தில், தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். - பா. பிரேம்சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர், செங்கல்பட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை